ஞானசார தேரருக்கு பெப்ரவரி 9 வரை விளக்கமறியல்

இலங்கையில், நீதிமன்றத்தை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான கலபொட அத்தே ஞானசார தேரரை பெப்ரவரி 9ஆம் அதிகதிவரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    
செய்தியாளர் பிரசாத் எக்னலிகொட காணாமல் போனது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்த போது, நீதிமன்ற வளாகத்தில் வைத்து பிரசாத் எக்னலிகொடவின் மனைவியை அச்சுறுத்தியதாக ஞானசார தேரர் மீது முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
அதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் அவர் ஆஜர் செய்யப்பட்ட போது விளக்கமறியலுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
தேரருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை வழக்கறிஞர் ஒன்றியம் சட்ட மா அதிபர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை கேட்டிருந்தது.
இதற்கிடையே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டபோது நீதிமன்றத்துக்கு வெளியே ஒருவிதமான பதற்ற நிலைமை உருவானது.
சில பௌத்த பிக்குகளும் ஆதரவாளர்களும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றபோதிலும் போலிஸார் அவர்களை தடுத்தனர்.
இதற்கிடையே ஞானசார தேரரின் நடவடிக்கைகள் குறித்து தான் வெட்கப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவானது என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பௌத்தர் என்ற வகையில் நாம் அனைவரும் வெட்கப்படுகிறோம் என்றும் கூறியுள்ளார்.
கலபொட அத்தே ஞானசார தேரரின் கைது தொடர்பில், இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே இவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த கைது தொடர்பில், மல்வத்த மஹநாயக்க தேரருக்கு முழு அறிக்கை ஒன்றை சமர்பிக்கும்படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் அங்கு கூறினார்.
சட்டம் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்ற நிலையில், அதற்கு அனைவரும் கீழ்படிய வேண்டும் எனவும், புதிய அரசு வன்முறைக்கு ஒருபோதும் இடமளிக்காது என்றும் அவர் கூறினார். நீதிமன்றத்தின் முன் சத்தமிட்டு, அதனுள் நுழைய முற்பட்டவர்கள் மீதுதான் நீதிமன்ற உத்தரவுக்கமைய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது உரையின்போது மேலும் தெரிவித்தார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan