மனித உரிமை மீறல் விசாரணை! இலங்கை அரசின் நிலைப்பாடு என்ன?



இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிகட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணையை எப்படி முன்னெடுப்பது என்பது குறித்து இலங்கை அரசுக்குள் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது போலத் தெரிகிறது.
அப்படியான விசாரணைகள் எதிலும் வெளிநாட்டவர் யாரும் இடம்பெற மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த வாரம் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால் பிரிட்டனிலிருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அளித்த பேட்டி ஒன்றில், பன்னாட்டு வல்லுநர்கள் உள்வாங்கப்படும் சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கு இல்லை எனக் கூறியுள்ளார்.
ஆனால் தேசிய சகவாழ்வு கலந்துரையாடலுக்கான அமைச்சர் மனோ கணேசன், ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் அவருடைய தனிப்பட்ட கருத்துக்கள் என பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்த விஷயம் தொடர்பில் அரசு இன்னும் அதிகாரபூர்வமான நிலைப்பாடு எதையும் எடுக்கவில்லை, விரைவில் அமைச்சரவை கூடி அது முடிவு செய்யப்படும் என அவர் கூறுகிறார்.
இலங்கை கூட்டு அனுசரணையாளராக இருந்து, ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்டு நிறைவேறிய தீர்மானத்தை செயல்படுத்த வேண்டிய கடப்பாடு அரசுக்கு உள்ளது எனவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
ஐ நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், பன்னாட்டு வல்லுநர்களை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் போன்ற ஒரு வழிமுறை உருவாக்கப்பட்டு, அந்த அமைப்பு இறுதிகட்ட போரின் போது இடம்பெற்ற விஷயங்கள் குறித்து விசாரித்து அறிக்கை வெளியிடும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்ந்து வரும் அரச குழுவின் தலைவரான நீதிபதி மக்ஸ்வெல் பரணகம எப்படியான விசாரணைகளை முன்னெடுப்பது என்பதை அரசுதான் முடிவு செய்ய வேண்டும்
என்றாலும், வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளுக்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராயலாம் என பரிந்துரை செய்துள்ளதை நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அதே அறிக்கையில் அப்படியான விசாரணைகள் தனித்துவமான இலங்கை வழிமுறையாகவே இருப்பதையே தாங்கள் பிரேரித்துள்ளதாகவும் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan