நம்பிக்கைதான் வளர்ச்சிக்கு விதை!



‘‘தமிழகத்துல வருஷத்துக்கு 2 லட்சம் பொறியாளர்கள் உருவாகி வர்றாங்க. மற்ற துறை பட்டதாரிகளும் லட்சக்கணக்குல வர்றாங்க. 90 சதவிகித மாணவர்களோட மனநிலை - படிப்பு முடிஞ்சதும் ஏதாவது ஒரு கம்பெனியில வேலை... மாதா மாதம் சம்பளம் - அவ்வளவுதான். உலகத்துல இளைஞர் வளம் நிறைஞ்ச நாடுகள்ல முன்னிலையில இருக்கிறது இந்தியாதான். ஆனா, இங்கே பயன்படுத்துற 70 சதவிகிதப் பொருட்கள் வெளிநாடுகள்ல கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 30 வருஷமா பெரிய கண்டுபிடிப்புகள் ஏதும் இங்கே நிகழல... பெருகி வர்ற மக்கள்தொகைக்கு ஏற்ப தேவைகள் பெருகிக்கிட்டிருக்கு. உற்பத்தித் துறையில ஏகப்பட்ட பங்களிப்பு தேவைப்படுது. நாடு அந்த பங்களிப்பைத்தான் மாணவர்களிட்ட எதிர்பார்க்குது. அதுக்குத் தகுந்த வகையில மாணவர்களை மேம்படுத்துற வேலையை ‘டை சென்னை’ அமைப்பு மூலமா நாங்க செய்றோம்...’’ - புன்னகை மாறாமல் பேசுகிறார் அகிலா ராஜேஷ்வர்... பெரிய பின்புலங்கள் இன்றி தட்டுத்தடுமாறி தடையை கடந்து சாதித்து இன்று முன்மாதிரிகளாக வளர்ந்திருக்கும் தொழிலதிபர்கள் இணைந்து நடத்தும்TiE Chennai (chennai.tie.org) அமைப்பின் எக்சிகியூட்டிவ் டைரக்டர்!

‘டை சென்னை’ அமைப்பு மாணவர்களையும் படிப்பு முடித்த இளைஞர்களையும் சுய தொழில் முனைவோராக மாற்றுவதற்கான பல்வேறு பணிகளை முன்னெடுக்கிறது. மாணவர் மத்தியில் தொழிலதிபர்களைக் கொண்டு அனுபவப் பகிர்வுகளை நடத்துவது, சிறந்த தொழில் திட்டங்கள் வைத்திருக்கும் மாணவர்களை முதலீட்டாளரிடம் அறிமுகம் செய்வது, திட்டங்களை விரிவுபடுத்தி வழிகாட்டுவது, இளம் தொழில்முனைவோரை உற்சாகப்படுத்துவது, ‘ஏஞ்சல் ஃபண்ட்’ முதலீட்டாளர்களை ஒருங்கிணைப்பது என பல்வேறு பணிகளில் ஈடுபடுகிறது.



TiE (The Indus Entrepreneurship)  என்ற உலகளாவிய அமைப்பு 1992ல் அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் தொடங்கப்பட்டது. இன்று உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்களும், இளம் தொழிலதிபர்களும், தாங்கள் ஆரம்ப காலங்களில் பட்ட சிரமங்களை அடுத்த தலைமுறையினர் படக்கூடாது என்ற நோக்கத்தில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்த அமைப்பை தொடங்கினர். இப்போது உலகெங்கும் 18 நாடுகளில் 61 பிரிவுகளில் இந்த அமைப்பு செயல்படுகிறது. இந்தியாவில் 16 கிளைகள் செயல்படுகின்றன. அதன் ஒரு அங்கமான ‘டை சென்னை’ 2014ல் தொடங்கப்பட்டது.

‘‘புதிய தொழில்முனைவோருக்கும், தொழில் முனைவோராக விரும்புபவர்களுக்கும், வெற்றிகரமான தொழிலதிபர்களுக்கும் இடையில் தொடர்பை உருவாக்குவது, பயிற்சி அளிப்பது, திட்டங்களை முறைப்படுத்தி முதலீட்டாளர்களோடு இணைப்பை உருவாக்குவது போன்ற பணிகளை டை சென்னை செய்கிறது. 800 உறுப்பினர்கள்... 165 மூத்த உறுப்பினர்கள் பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகிறார்கள். மாதம் 10 நாட்கள் ஏதேனும் ஒரு நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்துகிறோம். தொழில் தொடங்க முடிவு செய்திருப்பவர்கள், தொழில் தொடங்க திட்டம் வைத்திருப்பவர்கள், தொழில் தொடங்கி தொடக்க நிலையில் இருப்பவர்களுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்கிறோம்.



முன்பெல்லாம் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்றால் முதலீட்டுக்கு வங்கியில் கடன் கேட்டு அலைய வேண்டும். அல்லது கூடுதல் வட்டிக்கு தனி நபர்களிடம் கடன் வாங்க வேண்டும். இதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உண்டு. அதனால் பலரிடம் நல்ல திட்டங்கள் இருந்தாலும் அது வெறும் சிந்தனையுடனே முடிந்து போய்விடும். இன்று நிலை மாறிவிட்டது. பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டு இன்று முன்னணியில் இருக்கும் தொழிலதிபர்கள் தங்களுக்குப் பின்னால் வரும் தலைமுறை அப்படியான இடர்பாடுகளில் சிக்கக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் பல திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அப்படியான ஒரு திட்டம்தான் ஏஞ்சல் ஃபண்ட். நல்ல திட்டமும் செயலூக்கமும் இருக்கும் இளைஞர்கள் முதலீட்டுக்காக அலைய வேண்டியதில்லை. அவர்களின் தொழிலில் முதலீடு செய்ய ஏஞ்சல் ஃபண்ட் இருக்கிறது. தவிர மத்திய, மாநில அரசுகள் இதற்கென ஏராளமான நிதியை ஒதுக்கி வைத்துக்கொண்டு இளைஞர்களுக்காக காத்திருக்கின்றன. அந்த நிதியை குறைவான இளைஞர்களே  பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த விஷயத்தில் விழிப்புணர்வூட்டவும், ஏஞ்சல் ஃபண்ட் முதலீடு பற்றி விளக்கவும் 25 நாள் பயிற்சி முகாம்களை நடத்துகிறோம். ஓராண்டுக்கு ஆயிரம் பேர் இலக்கு. அவர்களின் ஐடியாக்களைப் பெற்று ஆய்வு செய்து அதை நடைமுறைக்கு சாத்தியமாக மாற்றி, செயல்திட்டமாக்கி புராஜெக்ட் ரிப்போர்ட்டாக ரெடி பண்ண உதவுகிறோம். முதலீட்டாளர்களிடம் அப்பாயின்மென்ட் வாங்கி அவர்கள் முன் அமர வைக்கிறோம். அவர்களை ஈர்த்து முதலீட்டைப் பெற வேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் திறனைப் பொறுத்தது. கல்லூரி மாணவர்களிடம் ஏகப்பட்ட சிந்தனைகள் புதைந்து கிடக்கின்றன. பலர் அற்புதமான தொழில் திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதை எப்படி விரிவாக்குவது, செயல்படுத்துவது என்று தெரியாமல் தங்களுக்காகவே அதை முடக்கிக்கொண்டு ஏதாவது ஒரு வேலையில் சேர்ந்து விடுகிறார்கள். அந்த திட்டம் அப்படியே தொலைந்து விடுகிறது. புராஜெக்ட் என்ற பெயரில் பொறியியல் கல்லூரிகளில் உருவாக்கப்படும் பல கருவிகள் அறைகளுக்கு உள்ளேயே முடங்கிக் கிடக்கின்றன.

அவற்றை மேம்படுத்தி பொதுப்பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு தடையாக இருப்பது பணம். அதற்காகத்தான் ஏஞ்சல் ஃபண்ட் உருவாக்கப்பட்டிருக்கிறது. மாணவர்களை படிக்கும் காலத்திலேயே உற்சாகப்படுத்தி எதிர்காலத்தை வளமாக்கும் பணியை இப்போது ‘டை சென்னை’ கையில் எடுத்திருக்கிறது. மாணவர்களிடம் நெருங்கிப் பழகி அவர்களின் உளவியலையும், திறனையும் அறிந்தவர்கள் பேராசிரியர்கள்தான். முதற்கட்டமாக அவர்களுக்கு ஒரு பயிற்சி வகுப்பை தொடங்கியிருக்கிறோம். மாணவர்களை உற்சாகப்
படுத்துவது, அவர்களின் திறனை மேம்படுத்துவது, அவர்களின் ஐடியாக்களை மேம்படுத்தி அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது போன்ற பயிற்சிகளை தேர்ந்த நிபுணர்கள் மூலம் வழங்குகிறோம். மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, கல்லூரிகள் மட்டத்தில் மாணவர்களின் தொழில் சார்ந்த சிந்தனைகளை மேம்படுத்தும் வகையில் 45 கல்லூரிகளில் இன்குபேட்டர் என்ற ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்திலும் டை சென்னை பங்களிப்பு செய்கிறது.

மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் பெருங்கனவாக விளைந்திருக்கிறது. இளம் தலைமுறை எங்காவது ஓரிடத்தில் வேலை செய்தால் போதும் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாம் நூறு பேருக்கு வேலை தரவேண்டும் என்ற சிந்தனையோடு கல்வி நிறுவனத்தை விட்டு வெளியே வரவேண்டும். அந்த பக்குவத்தை மாணவர்களுக்கு உருவாக்குவதற்காகத்தான் முன்னோடிகளையும் முன்மாதிரிகளையும் அவர்கள் முன்னால் நிறுத்துகிறோம்...’’ என்கிறார் அகிலா.

காக்னிசன்ட் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி நாராயணன், மெடால் நிறுவனத்தின் நிறுவனர் ராஜி வெங்கட்ராமன், சுரேஷ் கல்பாத்தி, நாராயணன் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களும் நிறுவனங்களின் நிறுவனர்களும் டை சென்னை அமைப்பின் பயிற்சி முகாம்களில் பங்கேற்று வழிகாட்டுகிறார்கள். இளம் தலைமுறைக்கு இருக்கும் இரண்டு பிரச்னைகள், அவநம்பிக்கை, தாழ்வு மனப்பான்மை. அவற்றைப் போக்கி, ஒரு வளமான வாழ்க்கையை அவர்களுக்கு அடையாளம் காட்டுகிறது இந்த அமைப்பு. நம்பிக்கைதானே
வளர்ச்சிக்கு விதை!

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan