அமெரிக்காவை தாக்குவதற்காக அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம்: வடகொரிய அதிபர் அதிரடி அறிவிப்பு

பியாங்யாங், ஜன.13-

வடகொரியாவின் அணு ஆயுத பலத்தை மேலும் விரிவுப்படுத்துவோம் என அந்நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணு ஆயுத பரவல் தடை சட்டத்தை மீறிய வகையில் கடந்தவாரம் சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வெடித்து வடகொரியா பரிசோதனை நடத்தியது. அந்நாட்டின் இந்த அத்துமீறலானது அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட உலகநாடுகள் கடும் எதிர்ப்பையும், ஐ.நா.சபை புதிய பொருளாதார தடையை அந்நாட்டின்மீது விதிக்க வேண்டும் என்ற வலியுறுத்தலையும் சம்பாதித்துள்ள நிலையில் வடகொரியா அதிபரின் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, வடகொரிய அரசின் செய்தி நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி, ‘எங்கள் நாட்டின் இறையாண்மைக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான சக்திமிக்க நாடுகள் எங்கள் மண்ணை ஆக்கிரமிக்கவோ, அச்சுறுத்தவோ முயன்றால், எந்த நேரத்திலும், எந்த இடத்தின்மீதும் தக்க பதிலடி தரும் வகையில் அணு ஆயுத பலத்தின் தரத்தையும், எண்ணிக்கையும் மேலும் விரிவுப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள அதிபர் கிம் ஜாங் உன், எதிர்காலத்தில் மேலும் சில ஹைட்ரஜன் குண்டுகளை வெடித்து, பரிசோதனை செய்யவும் அனுமதி அளித்துள்ளார்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவுக்கு நிகராக வடகொரியாவிடம் கொடூரமான பேரழிவை ஏற்படுத்தக்கூடிய 20 அணு ஆயுதங்கள் உள்ளதாகவும், இந்த (2016) ஆண்டு அந்த ஆயுதபலம் இருமடங்காக உயரலாம். அதற்கேற்ப அணு ஆயுதங்களை தயாரிக்க தேவைப்படும் மூலப்பொருளான யுரேனியத்தை அந்நாடு கையிருப்பில் வைத்துள்ளது என அண்டைநாடான சீனா ஏற்கனவே எச்சரித்திருந்தது, குறிப்பிடத்தக்கது.

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan