சில தலைவலியே மாரடைப்பின் அறி குறிதான்

இந்தக் காலத்துல யாரையும் நம்ப முடியலீங்க’ என்று சிலர் புலம்புவதைக் கேட்டிருப்போம். இப்போதெல்லாம் நோயைக் கூட அப்படி நம்ப முடிவதில்லை. நெஞ்சுவலி ஏற்பட்டால் அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்கும் என்பது நமக்குத் தெரியும். சம்பந்தமில்லாமல் தாடையில் வலி ஏற்பட்டால், அதுவும் மாரடைப்பின் அறி குறிதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள். மாறுவேடத்தில் இப்படியும் அறிகுறிகள் காண்பிக்குமா? இதய சிகிச்சை மருத்துவரான கிருபாகரனிடம் கேட்டோம். ‘‘வழக்கமாக மாரடைப்பு ஏற்படுவதன் அடையாளமாக நெஞ்சுதான் வலிக்கும். இதற்கு Typical symptom என்று பெயர். எதிர்பாராத வகையில் ஏற்படும் தாடைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படுவதை Atypical symptom என்று சொல்லலாம். இது தாடைவலியாக மட்டுமல்ல... கழுத்து வலி, இடது தோளில் வலி, முதுகு வலி என்று சம்பந்தமில்லாத இடத்திலும் அறிகுறியைக் காண்பிக்கும். இந்த வலி இதயத்திலிருந்து தான் உருவாகும். ஆனால், இதயத்துடன் தொடர்பில்லாத இடத்தில் வலிப்பது போல் நமக்குத் தோன்றும். அதற்காக, தாடைவலி வந்தாலே மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று பயப்பட வேண்டியதில்லை. இதுபோன்ற Referred pain அறிகுறி, 10 இதய நோயாளிகளில் ஒருவருக்குத்தான் ஏற்படுகிறது. அதே நேரத்தில், தாடைவலியை பல் சம்பந்தப்பட்ட பிரச்னையாக இருக்கும் என்றோ, ஈறுவலியாக இருக்கலாம் என்றோ அலட்சியமாகவும் இருந்துவிடக் கூடாது. குறிப்பாக உணவை மெல்லும்போது அதிகமாகும் தாடை வலி, காலை நேரத்தில் ஏற்படும் வலி போன்றவற்றை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. நம் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் பொது மருத்துவரிடமோ இதய சிகிச்சை மருத்துவரிடமோ ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது. ஒரு இ.சி.ஜி. எடுத்துப் பார்த்தால் தாடை வலியின் நிஜக் காரணம் என்னவென்று தெரிந்துவிடும்!’’

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan