போதைப் பொருள் ஒழிப்பு ஒரு சமூகப் பொறுப்பாகும் – ஜனாதிபதி




மதுபான விற்பனையைத் தடை செய்யவும் மதுபான அனுமதிப்பத்திரங்களை இரத்துச் செய்யவும் நாட்டின் ஜனாதிபதி என்றவகையில் தான் முழுமையாக தயாராக இருந்தபோதும் இன்று ஒரு சமூக சக்தியாக மாறியிருக்கின்ற போதைப் பொருளை முழுமையாகத் தடைசெய்வது முடியுமா என்பது முழு உலகமும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரும் சமூகப் பிரச்சினையாகும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
உலகில் உயர்ந்த அபிவிருத்திகளைக் கொண்டுள்ள நாடுகள் முதல் எல்லா நாடுகளும் எல்லா சமூகங்களும் இந்த போதைப்பொருள் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். போதைப்பொருள் பிரச்சினையை சமூகத்திலிருந்து முழுமையாக ஒழித்துக்கட்ட முடியாதபோதிலும் சமூகத்தை போதைப்பொருள்களில் இருந்து பாதுகாப்பதற்கு எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
நேற்று (நவம்பர், 16) கேகாலை ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற போதைப்பொருளில் இருந்து விடுதலை பெற்றநாடு மூன்றாவது கட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத்தெரிவித்தார்.
சட்டவிரோத போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளில் பதவிகள் மற்றும் நட்பின் அடிப்படையில் எவருக்கும் எந்தவொரு உதவியையும் பெற்றுக்கொடுக்கத் தான் தயாரில்லை எனக்குறிப்பிட்ட ஜனாதிபதி, குற்றவாளிகளுக்கு வழங்க முடியுமான உச்சபட்ச தண்டனைகளை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கையாகும் என்றும் குறிப்பிட்டார்.
பாடசாலைகள், விகாரைகள் மற்றும் நகருக்கு அண்மித்த இடங்களில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுவர அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
போதைப்பொருள்களை ஒழித்தல் தொடர்பில் அதிகபட்ச சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் செயற்பட்டபோதும் போதைப்பொருள் பாவனையைக் குறைப்பது சமூகப் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். மகாசங்கத்தினர்கள், சமயத்தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட எல்லோரும் இந்த விடயத்தில் ஒன்றுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
அமைச்சுக்கள் திணைக்களங்கள் கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களிலும் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான பிரிவைத் தாபிப்பதற்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன், போதைப்பொருளில் இருந்து விலகியிருப்பது தொடர்பான செய்தியை சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டத்திற்கு என்று இல்லாமல், மேலிருந்து கீழ் என்றவகையில் கொண்டுவருவதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தாபிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணியூடாக மாவட்ட மட்டத்தில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக தேவையான சுற்றுநிரூபங்களும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மாவட்ட செயலாளர் அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்களுக்கு இது தொடர்பில் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிகழ்ச்சித்திட்டத்தை செயல்திறனாக நடைமுறைப்படுத்துவதற்கு எல்லோரும் ஒன்றுபட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, கபீர் ஹசீம், சபரகமுவ மாகாண முதலமைச்சர் மஹீபால ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேச பாடசாலைப் பிள்ளைகள் பெருமளவில் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நன்றி – ஜனாதிபதி செய்தி ஊடகம்

No comments:

fazlycherryeducation.blogspot.com

| Copyright © 2013 Online Srilankan